வெள்ளி, 28 ஜனவரி, 2011

செயல்திட்ட முன்வடிவு அய்க்கியப் பேரவையிடம் சமர்ப்பிப்பு!

காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளான இளைஞர் அய்க்கிய முன்னணி (YUF), ரெட் ஸ்டார் சங்கம், மஜ்லிஸுல் கவ்து சங்கம் (தாயிம்பள்ளி), அய்க்கிய விளையாட்டு சங்கம் (USC), மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO), காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (QYSS), அல்அமீன் இளைஞர் சங்கம் (AYWA) ஆகிய அமைப்புகள் இணைந்து “காயல்பட்டினம் - வருங்கால செயல்திட்ட முன்வடிவு” என்ற செயல்தி்ட்ட முன்வடிவை (proposal) காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பாகக் கருதப்படும் காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையிடம் 24.11.2010 அன்று சமர்ப்பித்தது.


அன்றைய தினம், அமீரக காயல் நல மன்றத்தின் அழைப்பின் பேரில், அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து துபை புறப்பட்டுச் சென்றேன்.


7 பொதுநல அமைப்புகளின் சார்பாக, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் சகோதரர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் செயல்திட்ட முன்வடிவை காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையிடம் சமர்ப்பித்தார்.

காயல்பட்டினம் - வருங்கால செயல்திட்ட முன்வடிவு

காயல்பட்டினத்தின் நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பது குறித்து, நகரின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பென கருதப்படும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு, 24.11.2010 அன்று நகர பொதுநல அமைப்புகள் சார்பாக ஒரு செயல்திட்ட முன்வடிவு பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. செயல்திட்ட முன்வடிவு பின்வருமாறு:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தொலைநோக்குப் பார்வையில் காயல்பட்டினம்
செயல்திட்ட முன்வடிவு

காயல்பட்டினம் வரலாறு
தமிழக முஸ்லிம்களுக்கு காயல்பட்டினம் ஒரு இன்றியமையாத பண்பாட்டு மரபுச் செழுமைமிக்க தலமாகும். இந்நகரை முன்மாதிரியான ஒரு நகராகவும் பலர் பார்க்கின்றனர். அதிராம்பட்டினம், கீழக்கரையைப் போன்று காயல்பட்டினம் தமிழகத்தின் இஸ்லாமிய பண்பாட்டின் மையப்புள்ளியாகக் கருதப்பட்டு வருகிறது.
700 ஆண்டுகள் - இன்னும் சில தகவல்களின் படி 1400 வருடங்கள் பழமையான வரலாற்றுக்குச் சொந்தமான தன்னிகரற்ற ஊர்தான் காயல்பட்டினம்.

காயல்பட்டினம் – சிறப்பம்சங்கள்
 முஸ்லிம் பெரும்பான்மை மிக்க ஊர்
 இஸ்லாமிய மரபுகளுக்கு எவ்வித இடையூறுமில்லை
 ஒப்பற்ற “முடுக்கு” முறை கட்டிட அமைப்பு
 காவல் நிலையம், மதுக்கடை, திரையரங்குகள் இல்லாமை

தற்போதைய நிலைமை
சில காலங்களுக்கு முன்பு வரை காயல்பட்டினத்தின் எல்லையானது தெளிவற்று இருந்தது. உள்ளாட்சி அமைப்பு உருவாக்கத்திற்குப் பிறகு அதன் எல்லைகள் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நகரின் மையப்பகுதி பெருவாரியான முஸ்லிம்களைக் கொண்டிருந்தபோதிலும், அதன் சுற்றெல்லைகளில் நடக்கும் குடியேற்றங்கள் (எ.கா.: சுனாமி நகர்), நமதூரின் முஸ்லிம் பெரும்பான்மையை காலப்போக்கில் இல்லாமலாக்கிவிடும் என்ற நிலையை நமக்கு உணர்த்தி வருகிறது. அப்படியாகி விட்டால், முஸ்லிம்களாகிய நாம் நமதூரில் இஸ்லாமிய முறைப்படியான வாழ்க்கை முறையைப் பேணி வாழ்வதென்பது பாரதூரமான விஷயமாகிவிடும். இது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகும்.
பண்பாட்டு ரீதியாக நமதூர் மிகவும் ஆபத்தான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
• ஆபாச படங்களின் தாராள புழக்கம்
• விபச்சார சீரழிவு
• முறைகேடான பாலுறவு
• தொலைபேசி நட்பு
• நகரினுள் தாராளமாகக் கிடைக்கும் மதுபானம்
• பெருகிவரும் குற்றச்செயல்கள்
• சீரழியும் இளைஞர்கள் – சிறுவர்கள்
• மணவிலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
• பெரிய அளவில் என்றில்லாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூடா நட்பு காரணமாக பெண்கள் வீட்டை விட்டும் வெளிச்செல்லல்
ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க,
 வரைமுறையின்றி பெருகும் ஆட்டோக்கள் - அவற்றின் கட்டுப்பாடற்ற கட்டண நிர்ணயம்...
 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் - குறிப்பாக பண்டிகை காலங்களில் இறைச்சி விலையேற்றம்...
 நகராட்சியில் பரவலாகக் காணப்படும் ஊழல்...
 நகராட்சி நடவடிக்கைகளில் வெளிப்படையற்ற தன்மை...
 மென்மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு வரும் காயல்பட்டினம் கடற்கரை...
 DCW தொழிற்சாலை தொடர்பான அச்சங்கள்...
 காயல்பட்டினத்தில் அன்றாடம் உருவாகும் திடக்கழிவு மேலாண்மையில் உள்ள குறைபாடுகள்...

போன்ற பலவகை பிரச்சினைகள் மற்றும் வறுமை, தீராக்கடன், வேலையின்மை, தகுந்த வேலையின்மை போன்ற பிரச்சினைகளையும் நமதூர் சந்தித்து வருகிறது.
மேலும் மக்கள்தொகை பரவல் இன, மத ரீதியான ஜனத்தொகை அமைப்பு மற்றும் பண்பாட்டு அம்சங்களில் தீவிர – சிறப்புக் கவனம் செலுத்தப்படவில்லையெனில், பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் பெரும்பான்மைத் தலமாக விளங்கி வரும் நமதூர் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் தனித்தன்மையை இழந்துவிடும் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

வருங்கால காயல்பட்டினம் தொடர்பான நமது தொலைநோக்குப் பார்வை
 இனி வரும் நூற்றாண்டுகளுக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் பெரும்பான்மை ஊராக நீடித்திருப்பதை உறுதி செய்தல்...
 எவ்வித அச்சமோ, இடையூறோ இன்றி முஸ்லிம்கள் தங்களது நெறியைப் பின்பற்றுவதை உறுதி செய்தல்...
 கறைப்படுத்தும் எல்லாவித ஆதிக்கங்களிலிருந்தும் நமதூரின் ஒழுக்க – குடும்ப விழுமியங்களைக் காப்பாற்றி உறுதிப்படுத்தல்...
 ஜமாஅத்துகளுக்குள்ளேயும், ஜமாஅத்துகளுக்கு இடையேயும், பிற சமூகங்களுடனும் சுமுகமான நிலையைப் பேணி, அதன்மூலம் காயல்பட்டினத்தின் அமைதியை உறுதிப்படுத்தல்...
 குற்றச் செயல்களற்ற ஊராக காயல்பட்டினத்தை திகழச் செய்தல்...
 காயல்வாசிகளை உடல் நலமுடனும், வலிமையுடனும் திகழச் செய்தல்...
 கல்வித்துறை சாதனைகளில் காயல்பட்டினம் உச்சத்தைத் தொடச்செய்தல்...
 காயல்வாசிகளை பொருளாதார பலமும், துடிப்பும் மிக்கவர்களாக உருவாக்குதல்...
 நகராட்சி மற்றும் இதர பொதுச்சேவைக் கட்டமைப்புகள் தகுந்த காலத்தில் திறம்பட செயல்படக் கூடியதாகவும், பயன் தரத்தக்கதாகவும், ஊழலற்றதாகவும், பொதுநலத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் படியாகவும் வழிவகைகளை உறுதி செய்தல்...
 இம்மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், அதையும் தாண்டியுள்ள பிரதேசங்களுக்கும் நமது ஊரை முன்மாதிரியாக்குதல்...

இலக்கை அடைவதற்கான செயல்திட்டம்
நமதூரின் முன்னே அறைகூவல்கள் - சவால்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றை ஒரு தனி அமைப்பாகவோ அல்லது குறுகிய காலத்திலோ எதிர்கொண்டு தீர்வு காண்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
உள்ளூரிலும், வெளியூர்களிலும் வசிக்கும் காயல்வாசிகளின் முழு ஒத்துழைப்புடனும், தெளிவான கால வரையறையுடனும் கூடிய செயல்திட்டமே இதற்குத் தேவை. நம் முன் உள்ள பணிகள் ஏராளம் என்பதால், அந்த இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தேவைப்படுகின்றன.
• ஜமாஅத்துகள் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அத்தகைய பிரச்சினைகளை நன்முறையில் தீர்க்கும் வழிமுறைகளை ஜமாஅத்துகள் தாமாகவே வகுத்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
• மணவிலக்குகளைத் தவிர்க்கும் முகமாக, திருமணத்திற்கு முந்தைய – பிந்தைய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும. அத்தகைய பிரச்சினைகளைக் கையாளும் விதமாக ஜமாஅத் தலைவர்களுக்கு பயிற்சிகள் தரப்பட வேண்டும்.
• பொது இடங்களிலும், தெருக்களிலும் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் விதமாக சாத்வீக மக்கள் பாதுகாப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தலாம். ஒருநாள் முழுக்க, பணிமாற்று (ஷிஃப்ட்) முறையில் 24 மணி நேரமும் சைக்கிள்களில் இப்பிரிவு ரோந்து வருவதன் மூலம் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறியலாம். காவல்துறை இல்லாததினால் (காவல் நிலையம் நமதூருக்கு எக்காலத்திலும் தேவையில்லை என்ற நிலையை, நாம் தொடர்ந்து பேண வேண்டியதன் அவசியம் உள்ளது) நமது தற்காப்பு விஷயங்களில் இந்த ரோந்துப் பிரிவினர்தான் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். ஏதாவது பிரச்சினை ஏற்படும் கட்டத்தில், அவர்கள் உரியவர்களிடம் (ஐக்கிய ஜமாஅத் / காவல்துறை) அப்பிரச்சினைகளைக் கொண்டு செல்வர்.
• உடல் நலன் பேணிடும் சிகிச்சைக்கு பண உதவி அளித்திடும் பல நிறுவனங்கள் உருவாகிட வேண்டும்.
• அத்தியாவசியத் தேவையால் ஏற்பட்ட கடன்களிலிருந்து மீள முடியாமல் தவிப்போரை மீட்க பைத்துல்மால்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
• கூட்டுறவு சங்கங்கள், குடிசைத் தொழில்கள் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
• இக்ராஃ கல்விச் சங்கம் – இன்னும் பல வகையான கல்விப் பணிகளை ஆற்றும் வகையில் வலுப்படுத்தப்பட வேண்டும்.
• நகரத்தின் நலனுக்காக, நகராட்சியின் உறுப்பினர்கள் நேர்மையாக உழைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். நகராட்சியின் நடவடிக்கைகளை – குறிப்பாக அதன் நிதி எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஓர் அமைப்பு வேண்டும்.

இவையனைத்தையும் முறைப்படி செய்வதற்கு, காயல்வாழ் மக்களின் ஒட்டுமொத்த குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கலாம். (அல்லது இருக்கின்ற அமைப்பை மேம்படுத்தலாம்.) அந்த அமைப்பானது நீண்டகால விஷயங்களான மக்கள்தொகை பரவல், பண்பாட்டு விழுமியங்கள், நகரளாவிய உட்கட்டுமானம், பொதுச்சேவைகளின் தரம்..... போன்ற பொது விஷயங்களை எடுத்துப் பேசும் அமைப்பாக இருத்தல் வேண்டும்.

அனைத்து ஜமாஅத் கூட்டுச்சபை
காயல்பட்டினம் நகரின் மக்கள் தொகை பரவல், பண்பாட்டு விழுமியங்கள், நகரளாவிய உட்கட்டுமானம், பொதுச்சேவைகள் மேம்பாடு ஆகிய மேற்சொன்னவற்றை நடைமுறைப்படுத்திடும் பொருட்டு, செயல்பாட்டில் இருக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை மறுகட்டமைக்கலாம் அல்லது நகர பொதுமக்களின் வலுவான பிரதிநிதித்துவ சபை ஒன்றை புதிதாக உருவாக்கலாம்.
இந்த புதிய அமைப்பிற்கு “காயல்பட்டினம் அனைத்து ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு / அமைப்பு” All Kayalpatnam United Muslims Association / Organization (AKUMA / AKUMO / KAJMA / KAJMO) என்றோ அல்லது இதைப்போல வேறு பெயர்களையோ வைக்கலாம்.

இந்த மடல் வரைவுக்காக AKUMO என்று வைத்துக்கொள்வோம்...
AKUMO வின் வடிவம்
AKUMOவானது,
 தலைவர்
 துணைத்தலைவர்கள் (பலர்)
 செயலாளர்
 துணைச் செயலாளர்கள் (2)
 பொருளாளர்
 இணைப் பொருளாளர்
 செயற்குழு
 பல்வேறு செயல்திட்டங்களுக்கான துணைக் குழுக்கள்
என்ற முறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

AKUMO வின் பொதுக்குழு
இவ்வமைப்பின் பொதுக்குழுவில்,
 மஸ்ஜித்களின் முத்தவல்லிகள் (List ‘A’)
 List ‘A’ பட்டியலில் அடங்கியுள்ள மஸ்ஜித்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கூடுதல் பிரதிநிதி (List ‘B’)
 சமூக, பண்பாட்டு பொதுநல அமைப்புகளிலிருந்து ஓரோர் பிரதிநிதி (List ‘C’)
 வெளியூர் மற்றும் வெளிநாட்டு காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் (List ‘D’)
 தலைசிறந்த ஆளுமை மிக்கோர் / மார்க்க அறிஞர்கள் / சமூக நலப்பணியாளர்கள் (15 பேருக்கு மிகாமல்) (List ‘E’)
List ‘A’, ‘B’, ‘C’ and ‘D’ பட்டியல்களுக்குத் தகுதியான பிரதிநிதிகள் அந்தந்த மஸ்ஜித்கள், அமைப்புகளின் விரிவான கலந்தாலோசனைக்குப் பின் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
List ‘E’க்குத் தகுதியான பிரதிநிதிகள் நியமன அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்பட்டியலுக்காக பொதுமக்கள் தமக்குத் தாமே விண்ணப்பிக்கலாம் அல்லது பிறரைப் பரிந்துரைக்கலாம். ஆனால், List ‘A’, List ‘B’, List ‘C’ மற்றும் List ‘D’ பட்டியல்களிலுள்ள பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுக்குழுவே, அவர்களை நியமனம் செய்யும் இறுதி முடிவை எடுக்கும்.

பணிக்காலம்
பொதுக்குழு / செயற்குழு / துணைக்குழுக்கள் ஆகியவற்றின் பணிக்காலம் இரண்டு வருடங்களாகும். தலைமைப் பொறுப்பு, 06 மாதங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் அமையும். வெற்றிடங்கள் பொதுக்குழுவினால் நிரப்பப்படும்.

தலைவர் / துணைத்தலைவர் தேர்வு
தலைவரும், துணைத்தலைவர்களும் List ‘A’ பட்டியலிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் ஒருவர் தலைவராகவும், மீதமுள்ள அனைவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சுழற்சி முறையில் வரும் தலைமைப் பொறுப்பிற்கான தேர்வானது, அமைப்பு உருவாக்கத்தின்போது குலுக்கல் முறையில் நடைபெறும்.
இந்த அமைப்பின் தலைவர் / துணைத்தலைவர் பொறுப்பிலிருப்பவர் – அவர் சார்ந்த மஹல்லா மஸ்ஜிதின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுபட்டால், அவரது தலைவர் / துணைத்தலைவர் பொறுப்பு தானாகவே அவரை விட்டும் நீங்கி விடும். அப்பொறுப்பிற்கு அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த மஹல்லா மஸ்ஜிதின் புதிய தலைவர் தானாகவே வந்து விடுவார்.

பிற பொறுப்பாளர்கள்
செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், இணைப்பொருளாளர் போன்றவர்களை பொதுக்குழுவானது List ‘B’, List ‘C’, List ‘D’ பட்டியல்களிலிருந்து தேர்ந்தெடுக்கும்.

செயற்குழு, துணைக்குழுத் தலைவர்கள்
செயற்குழு உறுப்பினர்களையும், துணைக்குழுத் தலைவர்களையும் List ‘B’, List ‘C’, List ‘D’ பட்டியல்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். துணைக்குழுக்களை செயற்குழு உருவாக்கும்.

துணைக்குழு உறுப்பினர்கள்
பொதுக்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களிலிருந்து துணைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவர்களை செயற்குழு அங்கீகரிக்க வேண்டும்.

துணைக்குழுக்கள்
• ஜனத்தொகை பரவல் கண்காணிப்பு (ஆக்கிரமிப்பு, ஜனப்பரவலை மாற்றியமைக்கக் கூடிய குழுவினருக்கு நில விற்பனை)
• ஒழுக்க விழுமியங்கள் கண்காணிப்பு (ஊடகம், விபச்சாரம், ஆபாசப் பொருட்கள் உலா, கடற்கரை, மது...)
• குற்றக் கண்காணிப்பு (மக்கள் பாதுகாப்புப் பிரிவையும் மேற்பார்வையிடுதல்)
• பொதுமக்கள் வசதிகளைக் கண்காணித்தல்
• நகராட்சி மன்றத்தைக் கண்காணித்தல்
• காயல்பட்டினத்திற்குள்ளும், பிற சமூகங்களுடனும் அமைதி, நல்லிணக்கம்

சந்திப்புகள் / கூட்டங்கள்
 புதிய தலைமைத்துவத்தின் தொடக்கத்தில் பொதுக்குழுவானது 06 மாதங்களுக்கு ஒருமுறை (எடுத்துக்காட்டாக ஜனவரி, ஜூலை மாதங்களில்) கூடும்.
 02 மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழு கூடும்.
 AKUMOவின் அலுவலகம் எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் (7 x 24) இயங்கும். முக்கியமான – எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைக்கப்படும் அதன் அலுவலகத்தில், ஊதிய அடிப்படையில் பணியாற்றும் முழு நேரப் பணியாளர்கள் பலர் இருப்பர்.
 AKUMOவின் நிர்வாகிகள் தினமும் அதன் அலுவலகத்திற்கு வருகை தருவர்.
 துணைக்குழுக்கள் தேவைக்கேற்ப அடிக்கடி கூடுவர்.

துணைக்குழுக்களின் செயல்பாடுகள்

(அ) மக்கள் தொகைப் பரவல் கண்காணிப்புக் குழு
நில ஆக்கிரமிப்பு, அந்நியர்களுக்கு நிலம் விற்பனை, ஓடக்கரை, பேயன்விளை, மங்களாபுரம் (மங்களவாடி), கடையக்குடி, கற்புடையார் வட்டம், பூந்தோட்டம் போன்ற பகுதிகளைக் கண்காணித்தல்...

(ஆ) ஒழுக்க விழுமியங்கள் கண்காணிப்புக் குழு
• நூலகங்கள் உட்பட காயல்பட்டினத்தில் விற்கப்படும் / வாசிக்கப்படும் நூற்களைக் கண்காணித்தல்
• தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்காணித்தல்
• கேபிள் தொலைக்காட்சி கட்டுப்பாட்டாளர்களைச் சந்தித்து, சில அலைவரிசைகளைக் கட்டுப்படுத்தல்
• இணையதளத் தொடர்பை குழந்தைகள் கையாளும்போது அதைக் கண்காணிப்பது குறித்த பயிற்சியளித்தல்
• காயல்பட்டினத்தில் பொது இடங்களில் நடக்கும் மதுபானப் புழக்கம் / விற்பனை குறித்து காவல்துறையிடம் முறையிடல்
• ஆபாசத்தைப் பரப்பிடும் வெளியீடுகளை விற்போரைக் கண்காணித்தல்
• இளைஞர்கள் கைபேசி (மொபைல்) கருவிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கெதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல். (ஆபாச அம்சங்களை பரப்புதல், கீழ்த்தர நகைச்சுவை, தொலைபேசி நண்பர்கள்...)
• கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் நடைபெறும் ஒழுக்கக் கேடான செயல்களைக் கண்காணித்தல்.

(இ) குற்றச்செயல் கண்காணிப்பு
மக்கள் பாதுகாப்புப் பிரிவை நிறுவி, (இரவு / பகல் நேரத்திற்காக) நகரில் உள்ள முடுக்குகள், கடற்கரை போன்ற – எளிதில் குற்றச்செயல்கள் நடக்கத் தோதுவான இடங்களில் அந்நியரின் நடமாட்டங்களைக் கண்காணித்தல்.

(ஈ) பொதுமக்களுக்கான வசதிகளைக் கண்காணித்தல்
• நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள்
• தொலைபேசித் துறை
• பேருந்து இயக்கம்
• தொடர்வண்டிச் சேவை
• வங்கி
• மின்சார வாரியம்
• ஆவணப்பதிவு அலுவலகம்
• வாக்காளர் பட்டியல் சேகரிப்பு
• ஆட்டோ ரிக்ஷா கட்டணம்
• இன்றியமையாப் பொருட்களின் செயற்கை விலையேற்றம்
• காவல்துறையின் செயல்பாடு
போன்ற – நமதூர் மக்களுக்குத் தேவையான விஷயங்களைக் கண்காணித்தல்.

(உ) நகராட்சி கண்காணிப்பு
• நகராட்சிக் கூட்டங்கள்
• கூட்ட முடிவுகள்
• செயல்வடிவம் பெறக் காத்திருக்கும் திட்டங்கள்
• குடிநீர் வினியோகம்
• வரி விஷயங்கள்
• ஊழல்
போன்றவற்றைக் கண்காணித்தல்.
AKUMOவின் ஓரிரு பிரதிநிதிகள் நகராட்சியின் அனைத்துக் கூட்டங்களிலும் எப்போதும் பங்கேற்க வேண்டும்.

(ஊ) அமைதியும், நல்லிணக்கமும்
• இரு ஜமாஅத்துகளுக்கிடையில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால், அவர்களிருவரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அதைத் தீர்த்து வைத்தல்.
• பிற சமூகத்தாருடன் நல்லிணக்கத்தை வளர்க்கும் பொருட்டு ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகளுக்கு அவ்வப்போது ஏற்பாடு செய்தல்.

நிறைவாக.....
மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்துமே அமைதியான – சட்டப்பூர்வமான வழிமுறைகளில் நிறைவேற்றப்பட வேண்டியனவாகும்.
காயல்பட்டினத்தின் அனைத்து மக்களின் ஆக்கமும், ஊக்கமும் நிறைந்த உடல் உழைப்பையும், பொருளுதவியையும் வேண்டி நிற்கும் வேலையிது. இதில் காணப்படும் சில விஷயங்கள் பிற சமூகத்தினருக்கு சர்ச்சைக்குரியதாகப்படக் கூடியவை என்பதை மனதிற்கொண்டு, இதிலுள்ள அனைத்து ஆலோசனைகளும் இயன்றமட்டிலும் மிகவும் விரிவாக பரவலாக்கப்பட வேண்டும்.